சென்னை :
தமிழ்நாடு அரசு அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றுக்கு மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட உள்ளது.
அரசாணையத்தின் படி, 2026 ஜனவரி 1ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலப் புத்தாண்டு நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15 முதல் 17ஆம் தேதி வரை (வியாழன் முதல் சனி வரை) மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படுவது மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தைப்பூசம் பிப்ரவரி 1 (ஞாயிறு) அன்று, ரம்ஜான் மார்ச் 21 (சனி) அன்று மற்றும் புனித வெள்ளி ஏப்ரல் 3 (வெள்ளி) அன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 4 (வெள்ளி) அன்று, விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14 (திங்கள்) அன்று கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளுக்காக அக்டோபர் 19 மற்றும் 20 (திங்கள், செவ்வாய்) ஆகிய நாட்களிலும் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி நவம்பர் 8 (ஞாயிறு) அன்று, கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 (வெள்ளி) அன்று கொண்டாடப்பட உள்ளது.
அடுத்தாண்டு நீண்ட வார இறுதிகளும் தொடர்ந்து கிடைக்கும் விடுமுறைகளும் காரணமாக மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
