மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட இந்து வண்ணார் சமூக அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா பக்திப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது. மார்கழி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டில், ஆஞ்சநேயருக்குப் பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அலங்காரங்களும் செய்யப்பட்டன.
இந்த ஆன்மீக நிகழ்வில், அறக்கட்டளைத் தலைவர் சந்தனராஜ் இந்திரஜித், செயலாளர் நாகராஜ், நிர்வாகிகள் லட்சுமணன், சின்னத்துரை, ராஜ்குமார், கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அறக்கட்டளையின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தல்லாகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மகா தீபாராதனையைக் கண்டு ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்குக் கோயிலின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டுத் தல்லாகுளம் பகுதியே பக்தி மயமாகக் காட்சியளித்தது.
