பெங்களூருவிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட அரை டன் குட்கா பறிமுதல் பல்லடம் அருகே திருப்பூர் டிரைவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதைத் தடுக்க, மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, பல்லடம் – மங்கலம் சாலையில் உள்ள அறிவொளி நகர் வாய்க்கால் அருகே நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் பல்லடம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ‘ஈச்சர்’ ரக வேன் ஒன்றை மறித்து போலீசார் சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாகத் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், வேனை ஓட்டி வந்தவர் திருப்பூர் அவிநாசிகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் முனியாண்டி (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் ஈஸ்வரன் முனியாண்டியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

காவல்துறை தரப்பில் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ஈஸ்வரன் முனியாண்டி வாடகைக்கு வேன் ஓட்டி வருகிறார். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்குச் சரக்குகளை ஏற்றிச் சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பும் போது யாருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக இந்த குட்கா மூட்டைகளை ஏற்றி வந்துள்ளார். பெங்களூருவிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற போதே சோதனையில் சிக்கியுள்ளார். இதன் பின்னணியில் திருப்பூரைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் எவரேனும் உள்ளனரா அல்லது இது ஒரு நெட்வொர்க் போலச் செயல்படுகிறதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரு போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் சரக்குகளுக்கு இடையே குட்கா மறைத்து வைத்து கடத்தப்படுவது அதிகரித்துள்ளதால், பல்லடம் பகுதியில் இரவு பகலாகக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version