ஹஜ் இல்ல அடிக்கல் நாட்டு விழா: தலைமை ஹாஜிக்கு அனுமதி மறுப்பா?

சென்னையில் அண்மையில் நடைபெற்ற புதிய ஹஜ் இல்ல அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக அரசின் தலைமை ஹாஜிக்கே உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போலீசார் தடுத்ததாகவும் எழுந்துள்ள புகார் இஸ்லாமிய சமூகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இதுதான் சிறுபான்மையினருக்கு ஆதரவான அரசா?” எனத் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 39.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹஜ் பயணிகள் தங்குவதற்கான புதிய இல்லத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) அடிக்கல் நாட்டினார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன், “கடந்த நான்கு ஆண்டுகளாக இஸ்லாமிய சமூகத்திற்காக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் அவசர அவசரமாக இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியுள்ளது. இது முழுக்க முழுக்கத் தேர்தலுக்கான நாடகம்” என்று விமர்சித்துள்ளார்.

இந்த விழாவின் போது தமிழகத்தின் தலைமை ஹாஜியாக இருக்கும் உஸ்மான் முகைதீன் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஹாஜிகள் கலந்து கொள்ள வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு உரிய அழைப்பு இல்லை எனக் கூறி, காவல்துறையினர் அவர்களை நிகழ்ச்சிக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இஸ்லாமிய மார்க்க வழிகாட்டுதலின் மூத்தவராகக் கருதப்படும் தலைமை ஹாஜிக்கே முதல் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அற்ப அரசியலுக்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் அவருக்குப் பத்திரிகை கூட வழங்காமல், வந்த இடத்திலும் போலீசார் மூலம் அவரை அவமானப்படுத்தியுள்ளனர். ஒரு மாநிலத்தின் தலைமை ஹாஜியையே அடையாளம் தெரியாமல் போலீசார் வெளியேற்றுவது என்பது அந்தச் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்து வாக்கு வங்கி அரசியலுக்காகவே இதுபோன்ற திட்டங்கள் அவசர கதியில் தொடங்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், “உண்மையிலேயே இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கறை இருந்திருந்தால், அவர்களது மதத் தலைவர்களைப் புறக்கணித்திருக்க மாட்டார்கள். இச்சம்பவம் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினரின் காவலன் என்று சொல்லிக்கொள்ளும் திமுக அரசின் சாயம் இப்போது வெளுத்துப்போயுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கப்படவில்லை என்றாலும், முறையான அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே விழாவிற்கு அனுமதிக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், ஒரு அரசு விழாவில் மூத்த மதத் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Exit mobile version