மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் ஏழை எளியோரின் பசி தீர்க்கும் நோக்கில், “ஸ்டார்குரு” சாரிட்டபிள் பவுண்டேஷன் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் நிறுவனர், சமூகச் சேவகர் குருசாமி முன்னெடுத்துள்ள இந்த அறப்பணி 650-வது நாளை எட்டியுள்ளதை முன்னிட்டு, மதுரையின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்குப் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்: தினமும் சுமார் 1000 பேருக்கு உணவு வழங்கி வரும் குருசாமியின் இந்தச் சேவையைப் பாராட்டிய மதுரை இலக்கியப் பேரவை நிறுவனர் முனைவர் சண்முக திருக்குமரன், “இலக்கியத்தில் வரும் மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல, குருசாமி அவர்களின் கொடை உள்ளம் ஏழை மக்களின் பசி தீர்த்து வருகிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவருடன் தமிழ்நாடு கல்சுரல் அகாடமி, அக்னி சிறகுகள் பவுண்டேஷன், திரைப்பட இயக்குநர் கதிரவன், வணிகர் சங்க நிர்வாகி கே. ராஜபாண்டியன் உள்ளிட்டப் பல அமைப்புகளும், முக்கியப் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
பன்முக சமூகச் சேவைகள்: அன்னதானம் மட்டுமின்றி, குருசாமி அவர்களின் சமூகப் பங்களிப்பு மதுரையின் பல்வேறு தளங்களில் நீடிக்கிறது: சிறப்புப் பள்ளி சேவை: மதுரை அச்சீவர்ஸ் சிறப்புப் பள்ளியில் 150 நாட்களைக் கடந்து தினமும் 100 பேருக்கு உணவு வழங்கி வருகிறார். வைகை நதிப் பாதுகாப்பு: வைகை ஆற்றைச் சுத்தம் செய்யப் பல லட்ச ரூபாய் செலவில் ஆகாயத்தாமரைகளை அகற்றியதோடு, குப்பை கொட்டுவதைத் தடுக்க 200-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்களையும் நிறுவியுள்ளார். கல்வி மற்றும் வாழ்வாதாரம்: ஏழை மாணவர்களின் கல்விச் செலவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்குத் தொடர்ச்சியான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
“மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை” என்பதற்கேற்ப, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி 650 நாட்களாகத் தொடர்ந்து பசிப்பிணி போக்கி வரும் குருசாமி அவர்களை மதுரை மக்கள் ‘அன்னதான பிரபு’ என அன்போடு அழைத்து வருகின்றனர்.
