புட்டபர்த்தி (ஆந்திரா ): குரு பூர்ணிமாவை முன்னிட்டு, புட்டபர்த்தியில் அமைந்துள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் இன்று (ஜூலை 10) காலை முதல் இரவு வரை ஆன்மிக வளம் நிறைந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் இந்தியா முழுவதும், மேலும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த நாளில், தெய்வீக குருவாகவும், நித்திய வழிகாட்டியாகவும் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு பக்தியுடன் மரியாதை செலுத்தப்பட்டது. பாரம்பரியத்தை போற்றும் வகையில் பக்தி, ஆன்மிக சிந்தனைகள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. விழாவை ஒட்டி, சாய் பிரசாந்தி நிலையம் முழுவதும் விழாக்கோலமாக அலங்கரிக்கப்பட்டது. குல்வந்த் அரங்கம் வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
விழா காலை 8:00 மணிக்கு வேத பாராயணத்துடன் தொடங்கியது. பின்னர், காலை 8:20 மணிக்கு பிரசாந்தி பஜன் குழுமத்தின் ‘குரு வந்தனம்’ நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 9:05 மணிக்கு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நம்பிக்கையாளர் ஸ்ரீ எஸ்.எஸ். நாகானந்த் உரையாற்றினார். அதில், பகவானின் போதனைகள், பகவத்கீதை மற்றும் வேதங்களில் உள்ள ஆதாரங்களை மேற்கோளாகக் கொண்டு, சத்குருவின் அவசியத்தையும், அவரது பாதிப்பையும் வலியுறுத்தினார்.
காலை 9:15 மணிக்கு, ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா உரையாற்றினார். பின்னர் காலை 9:25 மணிக்கு, உள்ளூர் விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினராக, மத்திய கிராமப்புற மேம்பாட்டு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், சொற்பொழிவுகள் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், பகவானின் பிருந்தாவனத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனந்துற்றனர்.