கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காய்கறி கடை உரிமையாளரை வெட்டிவிட்டு, பிடிபட முயன்றபோது போலீசாரையும் அரிவாளால் தாக்கிய பிரபல ரவுடியை, இன்ஸ்பெக்டர் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி சுபாஸ்கர் (25), இறுதியாக போலீசாரின் துப்பாக்கித் தோட்டாவிற்கு இரையாகியுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குறிஞ்சிப்பாடி மீனாட்சிபேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (50) என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த தீபாவளி பண்டிகையின்போது, ரமேஷின் கடையில் பணிபுரியும் ரஞ்சித் என்பவருக்கும், நெய்வேலி பெருமாத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுபாஸ்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரஞ்சித்திற்கு ஆதரவாகப் பேசிய ரமேஷ், ரவுடி சுபாஸ்கரை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஸ்கர், ரமேஷ் மீது தீராப் பகை கொண்டு சமயம் பார்த்து காத்திருந்துள்ளார்.
பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம், குறிஞ்சிப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த சுபாஸ்கர், கடையில் இருந்த ரமேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த ரமேஷ், மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குறிஞ்சிப்பாடி போலீசார், தலைமறைவான ரவுடியைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
நேற்று நெய்வேலி வட்டம்-30 பகுதியில் உள்ள முந்திரித் தோப்பில் சுபாஸ்கர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். தோப்பிற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த டூவீலரை நோக்கி போலீஸ்காரர்கள் வைத்தியநாதன் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் சென்றபோது, புதருக்குள் மறைந்திருந்த சுபாஸ்கர் திடீரென பாய்ந்து வந்து இரு போலீஸ்காரர்களையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார்.
நிலமையின் தீவிரத்தை உணர்ந்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார், குற்றவாளியைக் கட்டுப்படுத்தவும் தற்காப்பிற்காகவும் தனது துப்பாக்கியால் சுபாஸ்கரின் வலது காலில் சுட்டார். குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவுடியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த சுபாஸ்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். ரவுடி தாக்கியதில் காயமடைந்த இரண்டு போலீஸ்காரர்களும் நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிடிபட்ட சுபாஸ்கர் மீது நெய்வேலி, முத்தாண்டிக்குப்பம், ஊமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டம் ஒடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















