சிறைவாசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஐகோர்ட் கிளை உத்தரவு!

மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், சிறைத்துறை வகுத்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பாராட்டிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த நெறிமுறைகளைத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய, கிளைச் சிறைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “என் கணவர் துரைப்பாண்டி, திருச்சி சிறையில் விசாரணைக் கைதியாக உள்ளார். அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அவருக்குத் தேவையான சிகிச்சை மற்றும் சட்ட உதவிகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரரின் கணவர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு சிறைவாசி (கதிரேசன்) ஆகியோர் சிறைச்சாலையின் தொலைபேசியைப் பயன்படுத்தும்போது ஒரே நேரத்தில் பேசியதால், சிறைச்சாலை கையேட்டை மீறியதாகக் கூறி அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து திருச்சி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், அவர்கள் தனிமைச் சிறையில் இல்லை என்றாலும், சிறைவாசிகள் ஒருவருக்கொருவர் சுயாதீனமாகவும், பிரித்தும் வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சிறைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இனிமேல், சிறைவாசிகளுக்குச் சிறு தண்டனை வழங்கும்போது, எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விவரங்களைச் சிறை நிர்வாகம் கட்டாயமாக எழுத்துப்பூர்வ ஆவணமாக வழங்க வேண்டும். மேலும், இந்த விவரங்கள் அவருடைய பதிவேடுகளிலும் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளைச் சிறைத்துறை வகுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், சிறைத்துறை வகுத்துள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தனர். அத்துடன், சிறைத்துறைத் தலைவர் தரப்பில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய மற்றும் கிளைச் சிறைகளுக்கும் சுற்றறிக்கையாக உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், அனைத்துச் சிறைகளிலும் இவை கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். சிறைவாசிகளுக்குத் தண்டனை வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Exit mobile version