ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் : டிவி, ஏசி, கார் விலையில் பெரும் குறைப்பு !

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், இதுவரை 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு, இனி 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தால் மொத்தம் 353 பொருட்களின் விலை கணிசமாக குறைய உள்ளது.

டிவி விலையில் பெரிய சரிவு

32 அங்குலத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி, 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிவி விலை ரூ.2,000 முதல் ரூ.23,000 வரை குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, 43 அங்குல டிவி விலை சுமார் ரூ.2,000 வரை குறையக் கூடும்; அதேபோல் 75 அங்குல டிவியின் விலை ரூ.23,000 வரை குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்து உள்ளனர்.

ஏசி விலைக்கும் குறைவு

ஏர் கண்டிஷனர்களின் விலை ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வீட்டு மின்சாதனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கவுள்ளது.

சிறிய கார் விலை குறைவு

4 மீட்டர் நீளம் மற்றும் 1200 சிசி திறன் கொண்ட சிறிய கார்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்கள் விலையில் ரூ.62,500 வரை குறைய வாய்ப்பு உள்ளது.

சில பொருட்களுக்கு கூடுதல் வரி

இதே நேரத்தில், 5% மற்றும் 18% ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சேர்த்து, 40% சிறப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 38 வகை பொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளது.

ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு

முக்கியமாக, ஐபிஎல் போட்டி டிக்கெட் விலையில் அதிகரிப்பு ஏற்படும். இதுவரை 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், அது 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரூ.1,000 மதிப்புள்ள டிக்கெட்டின் விலை இனி ரூ.1,400 ஆகும்.

Exit mobile version