சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் மாற்றங்களை ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் நிலையில், அதிக வரி சுமையால் ஏழை, எளிய மக்கள் ஆண்டாண்டுக்குப் பாதிக்கப்பட்டதை இப்பொழுதாவது மத்திய அரசு ஒத்துக்கொள்கிறதா என தவெக கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது :
ஜிஎஸ்டி அதிக விகிதத்தில் இருந்ததால் பல சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
நீண்ட காலத்திற்குப் பிறகு பொதுமக்கள் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்துள்ளதை வரவேற்கிறோம்.
பால், ரொட்டி, தனிநபர் மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றிற்கு விலக்கு அளித்திருப்பது நல்லது; இருசக்கர வாகனங்கள், சிறிய கார்கள், விவசாய உபகரணங்களுக்கு குறைக்கப்பட்டுள்ள வரியும் சரியானது. ஆனால் இதையே இத்தனை ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தியிருந்தால் மக்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும்.
பெட்ரோல், டீசல் மீதான வரியும் குறைக்கப்பட வேண்டும். அவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
ஒன்றிய–மாநில வரி பகிர்வில் திருத்தம் அவசியம். தமிழ்நாடு போன்ற அதிக வரி ஈட்டித் தரும் மாநிலங்கள் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.
மேலும், பீகார் தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கத்துடன் இந்த வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுவதாகவும், நாட்டின் நலனை முன்னிறுத்தி சீர்திருத்தங்களை சரியான நேரத்தில் கொண்டு வருவதே சிறந்த ஆட்சி எனவும் அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

















