கோவில்பட்டி : ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை “புரட்சி” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வகுத்துக் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், பெண்கள் தொழிலில் செய்த பங்களிப்பு மற்றும் மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி விரிவாக பேசினார்.
“தீப்பெட்டி தொழிலின் வளர்ச்சிக்கு பெண்களே அச்சாணி. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் கடின உழைப்பை வணங்குகிறேன்,” என நிர்மலா சீதாராமன் கூறினார்.
அவரது பேச்சில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், இது மக்கள் நலனுக்காக எடுத்த புரட்சியான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார். 10% வரை குறைக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என அவர் அறிவித்தார்.
மேலும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மக்களின் உண்மையான பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் பாதிப்புகளை நன்கு புரிந்தவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
