இன்று தொடங்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் : பல பொருட்களுக்கு வரிவிகிதங்கள் குறைப்பு ?

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிவிகிதங்களில் பெரியளவு குறைப்புகள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி விகிதங்களில் சலுகை அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெறுகிறது.

2017 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), தற்போது 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக உள்ளது. இதை எளிமைப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்குகளாக மாற்ற பரிந்துரை செய்துள்ளது.

இதன் அடிப்படையில், 28% வரம்புக்குள் உள்ள சில பொருட்கள் 18%க்கு மாற்றப்படலாம்; 12% வரம்புக்குள் உள்ளவை 5%க்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய, இந்த பரிந்துரை முக்கிய பங்கு வகிக்கும் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. உணவு மற்றும் ஜவுளிப் பொருட்கள் அனைத்தையும் 5% வரிக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், சிமென்ட் மீதான வரி 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்படலாம். தனிநபர் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி பூஜ்ஜியம் ஆக்கப்படுவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நடுத்தர மற்றும் உயர்தர அழகு நிலையங்கள், சலூன்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மின் சாதனங்கள் — டிவி, ஏசி, ஃப்ரிட்ஜ் போன்றவை அனைத்தும் 18% வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்றும், சிறிய கார்கள் 18% வரி கட்டணத்திற்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய கார்கள் 22% செஸ் உட்பட மொத்தம் 40% ஆக இருக்கலாம். புகையிலை, மதுபானம் போன்றவற்றுக்கு 40% வரி விதிக்கப்பட உள்ளது.

இதனுடன், வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

Exit mobile version