குமரி முதல் சென்னை வரை ‘பசுமைப் பயணம்’:   திண்டுக்கல்லில் வரவேற்பு!

இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 780 கி.மீ தூரம் சைக்கிளில் பயணிக்கும் குழுவினருக்கு திண்டுக்கல் நகரமே திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளித்தது. திண்டுக்கல்லில் சுமார் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்து குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் நீதி மற்றும் இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகத்தான நோக்குடன், குமரி முதல் சென்னை வரை ‘பசுமைப் பயணம்’ என்ற பெயரில் சைக்கிள் பேரணி ஒன்று நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதிலும் இருந்து துறவியர் பேரவையைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர், கல்லூரி மாணவ-மாணவியருடன் இணைந்து இந்த சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 5-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம், 780 கிலோமீட்டர் தூரத்தை 16 நாட்களில் கடந்து சென்னையில் நிறைவடைய உள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயணத்தின் ஒரு பகுதியாக, குழுவினர் திண்டுக்கல் நகருக்கு வருகை தந்தனர். அவர்களுக்குப் பேகம்பூர் அவர்லேடி பள்ளிக்கு முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. துறவியர் பேரவை டிஎன்பி தலைவர் அருள்மிகு அன்னை மரிய பிலோமி. தலைமை வகித்தார். திண்டுக்கல் துறவியர் பேரவைத் தலைவர் மரிவளன். முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் சார்பில் அருள் முனைவர் பிலிப் சுதாகர், திண்டுக்கல் திருவருள் பேரவைத் தலைவரும் ஜிடிஎன் கல்வி நிறுவனங்களின் தலைவருமான முனைவர் ரத்தினம், சிம்கோடெஸ் இயக்குனர் விசுவாசம் என்ற ஞான திரவியம் ஆகியோர் குழுவினரைப் பாராட்டிப் பேசினர்.

திண்டுக்கல் நகர மக்களின் சார்பில் நகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் மற்றும் நகர துணை மேயர் ராஜப்பா ஆகியோர் தலைமையேற்று குழுவினரை வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பசுமைப் பயணக் குழுவினருக்கு திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் பாரம்பரியமான பறையிசையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த விழிப்புணர்வுப் பயணத்தின் முக்கிய அம்சமாக, குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்து, இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். சைக்கிள் பேரணிக் குழுவினர் திண்டுக்கல் அருகே உள்ள நல்லம்மாநாயக்கன் பட்டியில் தங்கினார்கள். மறுநாள், திருச்சி சாலை கல்லறை தோட்டம் அருகே பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், சேவைச் சங்கங்கள், திண்டுக்கல் மறைமாவட்ட துறவியர் பேரவை மற்றும் தோழமை நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் எனப் பலதரப்பட்டவர்களும் ஒன்றிணைந்து குழுவினருக்கு மீண்டும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் முடிவில், குழுவின் சார்பில் நிக்கோலஸ் நன்றி கூறினார். கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை செல்லும் இந்த ‘பசுமைப் பயணம்’, செல்லும் வழியெங்கிலும் மக்களின் பேராதரவுடன் சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

Exit mobile version