சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலையணிந்து, 41 நாட்கள் கடும் விரதமிருந்த பக்தர்களின் மண்டல கால பூஜை நிறைவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஐயப்பன் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடுகளும், அன்னதான நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கிய இந்த மண்டலக் காலம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் தங்களின் விரதப் பூர்த்தியை முன்னிட்டு ரத ஊர்வலங்கள் மற்றும் பக்திப் பெருக்கான வழிபாடுகளை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் நகரின் அடையாளமாக விளங்கும் மலையடிவாரம் ஐயப்பன், பகவதியம்மன் சமேத ஸ்ரீ ஸ்படிகலிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தில் மண்டல பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மலர் அலங்காரத்தில் காட்சியளித்த ஐயப்பனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரம்மாண்டமான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பள்ளிவாசலில் துவா: நெகிழ்ச்சியூட்டிய மத நல்லிணக்கம் கோபால்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி கிராமத்தில் நெகிழ்ச்சியூட்டும் விதமாக மத நல்லிணக்க நிகழ்வு அரங்கேறியது. வேம்பார்பட்டி ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற மண்டல பூஜையை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி வேம்பார்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு பள்ளிவாசல் அசரத் பாத்தியா ஓதி துவா (பிரார்த்தனை) செய்தார். பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் ஐயப்ப பக்தர்களை அன்புடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையும், ஊர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்பன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர் இழுத்த பக்தர்: மெய்சிலிர்க்க வைத்த வத்தலக்குண்டு விழா வத்தலக்குண்டு பகுதியில் அமைந்துள்ள கலியுக வரத ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற மண்டல பூஜையில் பக்தர்களின் நேர்த்திக்கடன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மஞ்சளாறு விநாயகர் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில், ஒரு ஐயப்ப பக்தர் தனது உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு, முதுகில் குத்தப்பட்ட அலகின் மூலம் ஐயப்பன் திருவுருவப் படம் தாங்கிய மலர் தேரை இழுத்து வந்தார். ஏழு கன்னிமார் சாமிகள் வழிநடத்த, இந்தத் தேர் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பக்தர்களின் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற சரண கோஷம் விண்ணைப் பிளந்தது.
பக்திப் பஜனை மற்றும் திருவிளக்கு பூஜை: சின்னாளபட்டியில் குருபூஜை சின்னாளபட்டி பேருந்து நிலைய ஐயப்பன் கோயிலில், சுவாமி தர்ம சாஸ்தா அறக்கட்டளை மற்றும் சுவாமிநாத சுவாமிகள் யாத்திரைக் குழு சார்பில் குருபூஜை மற்றும் மண்டல விழா நடைபெற்றது. அகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றம் ஆகியவற்றுடன் தொடங்கிய விழாவில், ஐயப்பனுக்குப் புஷ்பாஞ்சலி மற்றும் மண்டலாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சக்தி பூஜை மற்றும் பெண்களின் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பக்தர்களின் பக்திப் பஜனையுடன் கூடிய ரத ஊர்வலம் சின்னாளபட்டியில் வலம் வந்தது.
மாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்ற இந்த மண்டல பூஜைகள், ஆன்மீகத்தையும் தாண்டி மக்களின் ஒற்றுமை மற்றும் கலாச்சாரப் பிணைப்பை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. தங்களின் விரத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலை யாத்திரைக்கான இறுதித் தயாரிப்புகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
