மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா இராமையன்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ எல்லம்மாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெரிய கருப்புசாமி, ஸ்ரீ சின்ன கருப்புசாமி மற்றும் பரிவாரத் தெய்வங்களின் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழா பக்திப் பெருக்குடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் திருப்பணிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் பங்காளிகளின் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு, மகா குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கின. பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் வைத்து ஓதுவார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
விழாவின் சிகர நிகழ்வான குடமுழுக்கு அன்று, யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்கக் கொண்டு செல்லப்பட்டு, ஸ்ரீ எல்லம்மாள் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் கோபுரக் கலசங்களில் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓ சக்தி’, ‘கருப்பா’ எனப் பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தர்களுக்குத் திருக்கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆன்மீக விழா ஏற்பாடுகளைத் திருக்கோவில் பூசாரி சீனிவாசன், கெண்டிக்கோட்டை வம்ச ரோகிபிள்ளவாரு ரெட்டியார் பங்காளிகள் மற்றும் இராமையன்பட்டி கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். குடமுழுக்கு விழாவால் இராமையன்பட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
















