தமிழகத்தில் இளைஞர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருவதாக மாநில ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் சரிந்து வருவதாகவும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் பாதிக்கும் அதிகமானோர் இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்கொலை அதிகரிப்பு
மாநிலத்தில் தினசரி 65 பேர் தற்கொலை செய்கிறார்கள் என்பது மனதை உலுக்கும் நிலை என ஆளுநர் கூறினார். குடும்பத்துடன் கூட்டு தற்கொலை செய்வதில் தமிழகத்தின் நிலை நாட்டில் மிக மோசமாக உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
போதைப்பொருள் புழக்கம்
இளைஞர்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள்களிலிருந்து ரசாயன போதைப்பொருள்களுக்கான மாறுதல் வேகமாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள் அளவு அதிகரித்து வருவதாகவும், அதிகாரத்தின் ஆதரவுடன் சிலர் இந்த வலையமைப்பை நடத்துவதால் கட்டுப்படுத்துவது கடினமாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாலியல் குற்றங்கள்
2024-ஆம் ஆண்டில் சிறாருக்கு எதிரான (போக்சோ) வழக்குகள் 56% உயர்ந்துள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் 33% அதிகரித்துள்ளன. இதனால் பெண்கள் மற்றும் சிறார்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள் என்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கடுமையாக ஒடுக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.