போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்… பெற்றோரின் ஆவேசம் – மாணவர்களின் ஆதரவு !

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர், ஏழாம் வகுப்பு மாணவிகளை பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று தவறான தொடுதலில் ஈடுபட்டதாக 5-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, பொறுப்பு தலைமை ஆசிரியர் குழந்தைகள் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, குறித்த உடற்கல்வி ஆசிரியரை நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், இந்த விவரம் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படாதது குறித்து பெற்றோர் ஆவேசம் தெரிவித்தனர். “எங்கள் குழந்தைகள் தொடர்பான முக்கியமான விஷயம் நடந்தும், பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் எங்களுக்கு தகவல் தரவில்லை” என்று குற்றம் சாட்டி பள்ளி வளாகத்தையே முற்றுகையிட்டனர். இதனால் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு வந்து, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். பெற்றோர்கள், “தங்களிடம் ஆலோசனை இல்லாமல், குழந்தைகளிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்தது தவறு. இதில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

இந்நிலையில், கைதான உடற்கல்வி ஆசிரியர் மீது எந்த குற்றமும் இல்லை என்று கூறி, மாணவர்கள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version