மதுரை :
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தேசிய நெடுஞ்சாலையான NH44-ல் அமைந்துள்ள நான்கு முக்கிய சுங்கச் சாவடிகளுக்கு ரூ.276 கோடி கட்டணத் தொகையை செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச் சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போக்குவரத்துக் கழகம் உடனடியாக பாக்கி தொகையை செலுத்த வேண்டும், இல்லையெனில் 2025 ஜூலை 10 முதல் அந்த சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல அரசு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று (ஜூலை 10) முதல் இந்த உத்தரவு அமலில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து, மேலதிக விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
மத்திய நெடுஞ்சாலை ஆணையத்தினரின் உத்தரவுப்படி, நள்ளிரவு 12 மணி முதல் பணம் செலுத்தாத அரசு பேருந்துகளின் விவரங்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் பெயர், கையொப்பத்துடன் சுங்கச் சாவடிகளில் பதிவாகி வருகிறது.
முன்னெச்சரிக்கையாக, சுங்கச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களும் கடமையில் பணியாற்றி வருகின்றனர்.
