முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றபின்பும் அரசு வழங்கிய பங்களாவை காலி செய்யாமல் இருப்பது தொடர்பாக நிலவும் விவகாரம் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
அவருக்கான அரசு பங்களா, கிருஷ்ணா மேனன் மார்க் எண் 5-ல் அமைந்துள்ளது. இந்த பங்களாவின் அனுமதி கடந்த மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து, பங்களாவை உடனடியாக காலி செய்ய உச்சநீதிமன்றம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்த விவகாரத்துக்கு விளக்கமளித்த டி.ஒய். சந்திரசூட், “எனக்கு ஒதுக்கப்பட்ட புதிய வாடகை வீடு தற்போது புனரமைப்பு பணிகளில் உள்ளது. அந்த பணி முடிந்தவுடன் அங்கு சென்று விடுவேன். இது நீண்டநாள் தங்கும் நோக்கமல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பே, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதியேன். ஆனால் பதில் வரவில்லை” என கூறியிருந்தார்.
இந்நிலையில், NDTV-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சந்திரசூட் தனது குடும்பத்தில் உள்ள சோகமான பின்னணியை பகிர்ந்துள்ளார்.
அதில், “எனது மகள்கள் பிரியங்கா மற்றும் மஹி இருவருக்கும் நெமலின் மயோபதி எனும் அரிய மரபணு நோய் உள்ளது. இது தசைகள் சிதைவடையும் ஒரு சிக்கலான உடல்நிலை. சுவாசம், விழுங்குதல், பேச்சு மற்றும் உடல் இயக்கங்களை கடுமையாக பாதிக்கக்கூடியது. இப்போது உலகம் முழுவதும் இதற்கான சிகிச்சை இல்லை. ஆனால் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன,” எனத் தெரிவித்தார்.
“அவர்களுக்கு தினசரி மருத்துவ பயிற்சிகள் தேவைப்படும். 24 மணி நேரமும் கவனிப்பும், மாற்றியமைக்கப்பட்ட வசதிகளும் கொண்ட வீடு அவசியமாக உள்ளது. அரசாங்கம் எனக்காக ஒதுக்கிய வீடு புனரமைக்கப்பட்டு வருகிறது. அது முடிந்ததும் நிச்சயமாக தற்போதைய பங்களாவை காலி செய்வேன். இது என் குடும்ப சூழ்நிலையை வைத்தே ஏற்பட்ட தாமதம் மட்டுமே” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவரது மகள்கள் சதுரங்கத்தில் திறமைசாலிகள் என்றும், சமஸ்கிருத பாடசாலையில் கல்வி கற்றுவந்ததாகவும், தற்போது வீட்டிலேயே கல்வி கற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். “மனைவி கல்பனா அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனமாக கவனித்துக் கொள்கிறார். ஓய்வு பெற்ற எனது காலத்தை மகள்களுடன் அமைதியாக கழிக்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
ஒருகாலத்தில் பல முக்கிய தீர்ப்புகளால் புகழ் பெற்ற நீதிபதி சந்திரசூட், தற்போது குடும்பப் பின்னணியால் இவ்விவகாரத்தில் பேசப்படுகிறார். இந்த விவகாரத்தில் மனிதநேயம் மற்றும் நியாயம் இரண்டும் இடம் பெற வேண்டியது அவசியமென பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.