தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருந்தது 2017–18ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பழைய தகவல்களை அடிப்படையாக வைத்து தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்கிறார் என்றும், அதனால் அவர் கொஞ்சம் “அப்டேட்” ஆக வேண்டும் என்றும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக அரசை “தீய சக்தி” என கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், அத்திகடவு – அவினாசி திட்டம் ஏன் விரிவுபடுத்தப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாகவும் கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கான புள்ளி விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இதற்கு பதிலளித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு பயனாளியாவது அரசு திட்டங்களால் பயன்பெறும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சமூகநல திட்டங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பெண்களின் மனநிலையும், ஆதிதிராவிட சமூகத்தின் நம்பிக்கையும் அரசியல் மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன என குறிப்பிட்ட அமைச்சர், மகளிர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணம் போன்ற திட்டங்கள் பெண்களின் ஆதரவை முதல்வருக்கு உறுதியாக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், “காலனி” என்ற சொல் பயன்படுத்தக் கூடாது என முதல்வர் பிறப்பித்த அரசாணை சமூக சமத்துவத்தின் அடையாளம் என்றும் கூறினார்.
பள்ளி இடைநிற்றல் தொடர்பாக விளக்கம் அளித்த அன்பில் மகேஷ், 2017–18ஆம் ஆண்டில் அந்த விகிதம் 16 சதவிகிதமாக இருந்ததாகவும், தற்போது அது 7.7 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விவரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டவை என்றும், அதற்கான விளக்கமும் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பழைய தகவல்களை வைத்து திமுக அரசை விமர்சிப்பது பொருத்தமற்றது என்றும், அதனால் தவெக தலைவர் விஜய் தற்போதைய தரவுகளை அறிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

















