100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்: திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதைக் கண்டித்து, திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை மணிக்கூண்டு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசு சமீபத்தில் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு” (MGNREGA) மாற்றாக, “வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்” (VB-G RAM G) என்ற புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் இருந்து தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர மாவட்டத் தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார்.இதில் மகிளா காங்கிரஸ் பெண்கள், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், வர்த்தகப் பிரிவு மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவு என சுமார் 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மகாத்மா காந்தியின் புகைப்படத்தைக் கையில் ஏந்தியவாறு, காந்தியின் பெயரை நீக்கிய மத்திய அரசைக் கண்டித்து ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர்.

“இந்தத் திட்டம் ஒரு சட்டப்பூர்வ உரிமை. இதில் காந்தியின் பெயரை நீக்குவது என்பது அவரது கொள்கைகளையும், ஏழைகளுக்கான அவரது பங்களிப்பையும் அவமதிக்கும் செயலாகும். மேலும், புதிய சட்டத்தின் மூலம் மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையை ஏற்றி, ஏழை எளிய மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது” என்று ஆர்ப்பாட்டத்தின் போது தலைவர்கள் பேசினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் மணிக்கூண்டு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version