ஹலால் சான்றிதழ் மூலம் சேகரிக்கப்படும் நிதி, பயங்கரவாதம், லவ் ஜிஹாத் மற்றும் மதமாற்றம் போன்ற செயல்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “உத்தரப்பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது. எந்தவொரு பொருளையும் வாங்கும் முன் அதில் ஹலால் லேபிள் உள்ளதா என மக்கள் கவனிக்க வேண்டும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“நாங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, ஹலால் சான்றிதழ் மூலம் நாடு முழுவதும் சுமார் ₹25,000 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் இதை எந்த அரசாங்க நிறுவனமும் அங்கீகரிக்கவில்லை. அந்த நிதி தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஹலால் சான்றிதழ் என்ற பெயரில் நுகர்வோரை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை அவசியம்.”
அதேபோல், மாநிலத்தின் அரசு நிகழ்வுகளில் மத சார்பற்ற சமநிலை பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். “முதல்வர் இல்லத்திலும் ராஜ்பவனிலும் முன்னர் ஈத் மிலன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் ஹோலி, தீபாவளி போன்ற விழாக்கள் நடத்தப்படவில்லை. எனவே, அரசு ஏற்பாடு செய்யும் அந்த வகை நிகழ்ச்சிகளை நிறுத்த தீர்மானித்தோம். ஆனால் தனிநபர்கள் தங்கள் விருப்பப்படி விழாக்களை கொண்டாடலாம்,” என்றார்.
இந்திய கலாச்சாரத்தை வலியுறுத்திய அவர், “எங்கள் நாட்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. சாதி, சமூகம், மதம் என எந்த வேறுபாடும் இன்றி, மக்கள் அனைத்தையும் ஒன்றாக அனுபவிக்கிறார்கள்,” என்றார்.
ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசும்போது, “அரசின் ஆதரவின்றி உருவான இவ்வமைப்பு, நக்சலைட் பகுதிகளில் கூட சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இன்று ஒரு RSS தொண்டர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார் என்பது பெருமை,” என்று கூறினார்.
அயோத்தியிலுள்ள ராமர் கோயிலை நினைவுகூறிய அவர், “ஒரு காலத்தில் ராமர் கோயில் கட்ட இயலுமா என்று சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் இன்று அது நனவாகியுள்ளது,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
















