கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் அசாதாரணக் காலநிலை மாற்றத்தால், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சேனைக்கிழங்கு பயிர்கள் கருகிச் சேதமடைந்து வருவது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவதி ஆற்றுப் பாசனத்தை ஆதாரமாகக் கொண்டு, சின்னதாராபுரம், தொக்குப்பட்டிபுதூர், தொக்குப்பட்டி, சீரங்ககவுண்டனூர், ராஜபுரம், நஞ்சை காளக்குறிச்சி மற்றும் வெங்கக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயிகள் ஆர்வத்துடன் சேனைக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். ஆண்டுதோறும் இப்பகுதி விவசாயிகளுக்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாகவும், நல்ல லாபம் தரும் பயிராகவும் சேனைக்கிழங்கு விளங்கி வந்தது.
ஆனால், இந்தாண்டு நிலவும் வழக்கத்திற்கு மாறான கடும் குளிரும், அதிகாலை நேரங்களில் பெய்யும் அடர்ந்த பனிப்பொழிவும் விவசாயிகளின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. கடும் பனியின் தாக்கத்தால் சேனைக்கிழங்கு செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, தண்டுகள் அழுகி, செடிகள் முற்றிலும் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது குறித்துக் கவலையுடன் பேசிய இப்பகுதி விவசாயி ராமசாமி, “நாங்கள் வழக்கமாகப் பருத்தி மற்றும் சேனைக்கிழங்கைப் பிரதானமாகப் பயிரிட்டு வருகிறோம். குறிப்பாக, ஒரு ஏக்கர் சேனைக்கிழங்கு சாகுபடி மூலம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதற்காகப் பெரும் முதலீடு செய்துள்ளோம். ஆனால், தற்போது பெய்து வரும் விபரீதமான பனிப்பொழிவால் செடிகள் கருகி வருவதால், போட்ட முதலீடே திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது,” என வேதனை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் திகைத்து வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது பயிர்களும் அழுகத் தொடங்கியிருப்பது பெரும் பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பனிப்பொழிவிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















