சென்னை:
தமிழ்நாடு அரசின் கல்லூரி மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் இத்திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படி, 2025–26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் அரசு கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மடிக்கணினி அல்லது கைக்கணினி (டேப்) வழங்கப்படும்” என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ஹெச்.பி., டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்களிடமிருந்து 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்துள்ளது. மாணவர்களுக்கு வழங்குவதற்கான நிர்வாக ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. தற்போது வாக்கு செலுத்தும் வயதுக்கு வந்தவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுவது, 10 லட்சம் வாக்குகளை பெறும் நோக்கத்திலான நடவடிக்கை” என விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பதை வரவேற்கும் பரந்த மனப்பான்மை கூட இல்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் இந்தத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்” என கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர், “கல்லூரி மாணவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் முடிந்து கல்லூரிக்கு திரும்பியவுடன் லேப்டாப் வழங்கப்படும். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்” என உறுதிபட தெரிவித்தார்.
அத்துடன், எல்காட் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் Perplexity AI நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் 6 மாத காலத்திற்கு Perplexity Pro AI வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.















