டெல்லி கார் குண்டுவெடிப்பில் நான்கு பேர் விடுதலை

டெல்லி செங்கோட்டை சிக்னல் அருகே நவம்பர் 10 ஆம் தேதி மாலை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தனது முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஹரியானா நம்பர் ப்ளேட் கொண்ட காரில் ஏற்பட்ட இந்த வெடிப்பு நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது. சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததும், 20 பேர் காயமடைந்ததும், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானதும் அப்போது பதிவானது.

இந்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், என்.ஐ.ஏ வெளியிட்ட அறிக்கையில் முதன்முறையாக இந்த தாக்குதல் தற்கொலை படை குண்டுவெடிப்பு என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காஷ்மீரை சேர்ந்த நபர் கைது

காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி என்ற நபர் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் இவரது பெயரில் இருப்பதும், அந்த வாகனத்தை IED குண்டு பொருத்தத் தயாரிக்க முன்பு வாங்க உதவுவதற்காக அவர் டெல்லி சென்றதையும் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

தற்கொலை தாக்குதல் நடத்திய உமர் நபி உடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாக என்.ஐ.ஏ கூறியுள்ளது. உமர் நபியின் அடையாளம் ஃபரிதாபாத் அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவ துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய உமர் உன் நபி என்பதும் விரல் ரேகை மற்றும் தடயவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், நபி பயன்படுத்திய மற்றொரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது ஆதாரங்களுக்காக ஆய்வு செய்யப்படுகிறது.

நான்கு பேர் விடுவிப்பு

இந்த வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் – டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் – மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகிய நான்கு பேரையும் NIA விசாரணைக்குப் பிறகு விடுவித்துள்ளது. இவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபியுடன் தொடர்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை காயமடைந்தவர்கள் உட்பட மொத்தம் 73 பேரிடம் NIA விசாரணை நடத்தியுள்ளது.

Exit mobile version