வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் தீவிரப் பிரச்சாரப் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 47-வது வார்டு பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அதிரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முத்துகவுண்டன்புதூர், கரட்டுப்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்ற அவர், கடந்த 2011 முதல் 2021 வரையிலான பத்து ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் கரூரில் நிறைவேற்றப்பட்ட பாலங்கள், சாலை வசதிகள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பட்டியலிடும் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் நேரில் வழங்கினார்.
அரசியல் களத்தில் தேர்தல் ஜூரம் இப்போதே தொற்றிக்கொண்டுள்ள நிலையில், வெறும் துண்டுப் பிரசுரங்களுடன் நின்றுவிடாமல், 2026-ஆம் ஆண்டிற்கான பிரத்யேகக் காலண்டர்களையும் பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி மலரவும், மக்கள் நலன் காக்கப்படவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையப் பொதுமக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாகப் பங்கேற்று “மீண்டும் வருவோம்” என்ற முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஏகாம்பரம் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர். அடிமட்டத் தொண்டர்கள் முதல் மாவட்டத் தலைமை வரை இப்போதே களத்தில் இறங்கியிருப்பது கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















