திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் மலைப்பாதையில், 9/6 செக்போஸ்ட் அருகே 7 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. உடுமலை – மூணாறு சாலையில், அமராவதி நகர் 9/6 செக்போஸ்டில் தொடங்கி சின்னாறு வரை சாலையின் இருபுறமும் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்கள் விரிந்துள்ளன. இந்தப் பகுதியில் யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் அதிக அளவில் வசிக்கின்றன.
உடுமலை வனச்சரகத்தில் உள்ள யானைகள் தண்ணீர் குடிப்பதற்காகச் சாலையைக் கடந்து அமராவதி அணைக்குச் செல்வது வழக்கம். பொதுவாகக் கோடை காலத்தில்தான் தண்ணீர் தேடி யானைகள் அதிக அளவில் இடம்பெயரும். மழைக்காலங்களில் வனத்திற்குள்ளேயே இருக்கும் குளம், குட்டைகளில் தண்ணீர் கிடைப்பதால் சாலையைக் கடப்பது குறைவாக இருக்கும். தற்போது 7 யானைகள் கொண்ட கூட்டம் சாலையோர வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால், அவை எப்போது வேண்டுமானாலும் சாலையைக் கடக்க வாய்ப்புள்ளது.
யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரும் வனத்துறையினர், வாகன ஓட்டிகளுக்குப் பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் யானைகள் முகாமிட்டுள்ள பகுதிக்கு அருகே வாகனங்களை நிறுத்திப் புகைப்படம் எடுக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கண்டிப்பாகக் கூடாது.
யானைகளைக் கண்டு அச்சமடைந்து அதிக ஒலியெழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்தக் கூடாது; இது யானைகளை ஆக்ரோஷமடையச் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகாலை மற்றும் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. யானைகள் சாலையைக் கடக்கும்போது போதிய இடைவெளி விட்டு வாகனங்களை நிறுத்தி, அவை பாதுகாப்பாகச் சென்றபின் பயணத்தைத் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

















