“அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேஜ கூட்டணியில்தான் தொடர்ந்து உள்ளார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்,” என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
“கடந்த லோக்சபா தேர்தலில் டி.டி.வி. தினகரன் எங்களோடு கூட்டணியில் இருந்துதான் போட்டியிட்டார். இன்று வரை அவர் எங்களோடு பயணித்து வருகிறார். எனவே அவர் கூட்டணியில் உள்ளாரா இல்லையா என்கிற கேள்விக்கு இடமே இல்லை.”
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்களை சாடிய அவர்,
“முதல்வர் ஸ்டாலின் பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கப் போவதாக கூறி வெளிநாடு செல்கிறார். ஆனால், இதற்கு முன் அவர் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றபோதும், அந்தப் பயணங்கள் மூலம் கிடைத்த முதலீடுகள் என்ன? எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது? அவற்றின் தற்போதைய நிலை என்ன? என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நான் முன்பே கோரிக்கை விடுத்தேன்.
ஆனால் இன்று வரை எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இப்போதும் அவர் வெளிநாடு சென்றிருக்கிறார். வழக்கம் போலவே, இந்த முறையும் எந்த முதலீடும் வராமல் சும்மா திரும்பி வருவார்,” என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி நியமனத்தைப் பற்றி ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருவதாகவும், அதுகுறித்து காத்திருந்து பார்ப்போம் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.