பாதாள சாக்கடை பணிகளைத் தொடர்ந்து புதிய சாலைகள்: மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி அதிரடி ஆய்வு

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று, மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை உறுதி செய்யும் நோக்கில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வார்டு எண் 8-க்கு உட்பட்ட சிவசக்தி நகர் மற்றும் வார்டு எண் 7 திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் அவர்களுடன் இணைந்து (28.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக, சிவசக்தி நகர், அங்கயற்கண்ணி நகர் மெயின் ரோடு, பொறியாளர் நகர், திருவள்ளுவர் தெரு மற்றும் கண்ணன் நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த தெருக்களில், போக்குவரத்து வசதியையும் பொதுமக்களின் சிரமத்தையும் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக ‘வெட் மிக்ஸ்’ (Wet Mix) சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, வார்டு எண் 7-ல் உள்ள திருப்பாலை சாரதி நகர் மெயின் ரோடு மற்றும் அதனைச் சார்ந்த குறுக்குத் தெருக்கள் முதல் விஸ்வநாததாஸ் நகர் வழியாகப் பனங்காடி மெயின் சாலை வரையிலான பகுதிகள் பல முக்கியத் தெருக்களுக்கு இணைப்புச் சாலைகளாக (Access Roads) விளங்குகின்றன. இந்தப் பகுதிகளில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 84 லட்சம் மதிப்பீட்டில் புதிய வெட் மிக்ஸ் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலைப் பணிகளின் தரம் மற்றும் தடிமனை ஆய்வு செய்த அமைச்சர் பி.மூர்த்தி, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

மேலும், பாதாள சாக்கடைப் பணிகள் காரணமாகத் தோண்டப்பட்ட சாலைகளை முறையாகச் சமன்படுத்தி, தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவிப் பொறியாளர் முருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் வாசுகி, ராமமூர்த்தி, ராதிகா உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர். மதுரை மாநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, நெரிசலற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதே அரசின் முதன்மை நோக்கம் என இந்த ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version