இமாச்சலில் வெள்ளச் சேதம் : கங்கனா பதிலுக்கு காங்கிரஸ் கடும் விமர்சனம் !

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இதில், மண்டி தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தொகுதியைச் சேர்ந்த பார்லமென்ட் உறுப்பினராகவும், நடிகையாகவும் அறியப்படும் கங்கனா ரணாவத்திடம், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கங்கனா, “நான் மத்திய அமைச்சரவையில் இல்லை. எனக்கு நிவாரண நிதி ஒதுக்கப்படுவதும் இல்லை. இந்த பணிகள் மாநில அரசின் பொறுப்பில் உள்ளன,” என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.

அவரது இந்த மறுமொழி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி, கங்கனாவின் பதிலை கடுமையாக சாடியுள்ளது. “இது போன்ற கடுமையான சூழ்நிலையில், மக்களிடம் அனுதாபம் காட்டாமல் பேசுவது ஒரு மக்களின் பிரதிநிதிக்கு பொருத்தமல்ல,” என்று மாநில காங்கிரஸ் அமைச்சர் ஜகத் சிங் நேகி தெரிவித்தார். மேலும், “தன்னால் பொறுப்புகளைச் செய்ய முடியாத நிலையிலே இருக்கிறாள் என்றால், கங்கனா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த பின்னணியில், பி.டி.ஐக்கு அளித்த பேட்டியில் கங்கனா, “தங்கள் கடமைகளைச் சரியாக செய்யாத சிலர், இமாச்சல மக்களை ஏமாற்றி விட்டனர். அவர்கள் எனக்கு போதிக்க எந்த உரிமையும் இல்லை. என் கடமைகளை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்,” எனக் கூறி உள்ளார்.

Exit mobile version