திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

திருவாரூர்: இந்திய முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அனுசரிக்கப்படும் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அவர்கள் கொடிநாள் நிதி வசூலைத் துவக்கி வைத்ததுடன், 24 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கொடிநாள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 24 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு மொத்தம் ரூ.7 லட்சத்து 1 ஆயிரத்து 137 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றில் முக்கியமானவை: கல்வி உதவித்தொகை கண் கண்ணாடி நிதியுதவி ஈமச்சடங்கு நிதியுதவி வீட்டு வரிச் சலுகை  முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் மூலதன மானியம்  முன்னாள் படைவீரர் மகளின் திருமணத்திற்காக 8 கிராம் தங்க நாணயம்  நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் ஆகியோர் உண்டியலில் பணம் செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலை முறைப்படி துவக்கி வைத்தனர்.

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், கொடிநாள் அனுசரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார் “நமது தாயகத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து, தன்னலமின்றி தன்னுயிரையும் துச்சமெனத் துறந்த நம் முப்படை வீரர்களின் சேவையை நினைவு கூரவும், எண்ணற்ற இன்னல்களுக்கிடையே அஞ்சாமல் அரும்பணியாற்றி வரும் வீரர்களின் கடமையைப் போற்றவும் ஆண்டுதோறும் டிசம்பர் 7 ஆம் நாள் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.”

கொடிநாள் நிதியாக வசூலிக்கப்படும் தொகையிலிருந்தே முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலனுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு கொடிநாள் வசூலில், திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு துறை அலுவலர்களின் ஒத்துழைப்பால் அரசு நிர்ணயித்த இலக்கான ரூ.86 லட்சத்து 42 ஆயிரத்தைக் கடந்து, கூடுதலாக ரூ.1 லட்சத்து 345 வசூலிக்கப்பட்டு, மொத்தம் ரூ.87 லட்சத்து 42 ஆயிரத்து 345 வசூல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சிறப்பான ஒத்துழைப்பு நல்கிய அரசு அலுவலர்களுக்குப் பாராட்டு தெரிவித்த ஆட்சியர், வருகின்ற படைவீரர் கொடிநாள் 2025 ஆம் ஆண்டிற்கு அதிக வசூல் புரிந்து மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், திருவாரூர் மாவட்ட மக்கள் அனைவரும் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியினை வாரி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இந்தக் கொடிநாள் நிதியை இணையவழி மூலமும் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகப்பிரியா, மாவட்ட முன்னாள் படைவீரர் நல கண்காணிப்பாளர் துர்கா, தேசிய மாணவர் படை முதன்மை அதிகாரி சதீஷ்குமார், 2ம் நிலை அலுவலர் சங்கீதா மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version