ICC WTC Final 2025 | ஐசிசி ஃபைனலில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் : 102 ரன்கள் குவித்த எய்டன் மார்க்ரம் !

லண்டன் : 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) ஃபைனல் போட்டி, லண்டனில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பேட்டிங் தேர்வு செய்து 212 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் (61) மற்றும் வெப்ஸ்டர் (54) அரைசதம் அடித்தனர். தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் ரபாடா தாக்கம் ஏற்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் (6/47) தீவிரமான பந்துவீச்சுக்கு 138 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறிய ஆஸ்திரேலியா

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர்கள் முற்றிலும் தடுமாறினர். 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (43) மற்றும் மிட்செல் ஸ்டார்க் (58) நல்ல பங்கை வகித்ததால், அணியானது 207 ரன்கள் சேர்த்தது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சதம் அடித்து சரித்திரம் படைத்த மார்க்ரம்

புதிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, 9 ரன்னில் தொடக்க வீரர் ரிக்கல்டனை இழந்தது. பின்னர், மார்க்ரம் மற்றும் முல்டர் இடையே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. முல்டர் வெளியேறியபோதும், செட்டாகிய மார்க்ரம் நிதானமாக விளையாடினார்.

அவருக்கு கேப்டன் டெம்பா பவுமா சிறப்பான ஆதரவளித்தார். இருவரும் அரைசதம் அடித்து பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தனர். அதில் மார்க்ரம் 11 பவுண்டரிகளை விளாசி 102 ரன்கள் அடித்து சரித்திர சாதனை செய்தார்.

ஐசிசி ஃபைனலில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் !

ஐசிசி ஃபைனல் போட்டிகளில் சதமடிக்கும் பெருமையை பெற்ற முதல் தென்னாப்பிரிக்க வீரராக மார்க்ரம் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளார். தற்போது தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா தனது முதல் ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிக அருகில் உள்ளது.

Exit mobile version