சென்னை நிதி நிறுவன மோசடி வழக்கில் சரணடைந்த தேவநாதன் யாதவை வரும் நவம்பர் 24ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நிதி குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்ட இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து கைது செய்யப்பட்ட அவர் முன்னதாக சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் 100 கோடி ரூபாயை வைப்புத்தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என முதலீட்டாளர்கள் தரப்பில் மீண்டும் முறையிடப்பட்டது.
இதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தேவநாதன் யாதவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த சூழலில், தேவநாதன் யாதவ் இன்று காலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் முன் சரணடைந்தார். அவரை நவம்பர் 24ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



















