தங்க நகை பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை முறையாக கணக்கில் கொண்டு வராத குற்றச்சாட்டில், ராமநத்தம் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் பிருந்தா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான அம்மணியம்மாள், வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, பெரம்பலூர் மாவட்டம் கீழபுலியூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற நபர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுப்பது போல் நடித்தார். பின்னர் அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இந்த வழக்கில் ராமநத்தம் போலீசார் பிரபாகரனை கைது செய்தனர். அதோடு, 3 பவுன் சங்கிலியும் ரூ.75 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்தை காவல் நிலைய பதிவில் சேர்க்காமல், இன்ஸ்பெக்டர் பிருந்தா கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் முதலில் இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் துறை விசாரணை நடைபெற்றது. அதன் அடிப்படையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் லஞ்சம் தொடர்பான வழக்கில் மற்றொரு இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
