“விவசாய நிலத்தின் விளைச்சலில் விவசாயிகளுக்கே முழு அதிகாரம் வேண்டும்”: சத்குரு வலியுறுத்தல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில், ஈஷாவின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் ‘நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் – ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விவசாய கருத்தரங்கு, தென்னிந்திய விவசாய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இக்கருத்தரங்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டிருந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய சத்குரு, இந்திய விவசாயிகளின் பொருளாதார சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும் காலனிய காலச் சட்டங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தை மிக வலுவாக முன்வைத்தார். குறிப்பாக, “விவசாய நிலங்களில் விளையும் அனைத்துப் பொருட்களும் அந்த நிலத்தின் விவசாயிக்கே முழுமையாகச் சொந்தமானதாக இருக்க வேண்டும்” என்றும், பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட “எட்டு அடிக்குக் கீழுள்ள மண் அரசுக்குச் சொந்தம்” போன்ற காலாவதியான சட்டங்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். நிலத்தில் தங்கம் கிடைத்தாலும் அதற்கு அரசு வரி விதிக்கலாமே தவிர, அதை முழுமையாகக் கைப்பற்றக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், “விவசாயத்தை வெறும் தாராளமயமாக்குவது போதாது, விவசாயத்தை இத்தகைய கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்க வேண்டும்” என முழங்கினார்.

மரம் சார்ந்த விவசாயத்தை வலியுறுத்திய சத்குரு, “மரங்களும் விலங்குகளும் இன்றி மண்ணைப் பாதுகாப்பது சாத்தியமற்றது; மரம் என்பது விவசாயிகளுக்கான ஒரு பாதுகாப்பு காப்பீடு போன்றது” என்று விளக்கினார். ஒரு விவசாயி தனது சொந்த நிலத்தில் வளர்க்கும் மரங்களை வெட்டுவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்றும், காடு மற்றும் விவசாய நிலங்களுக்கு இடையே தெளிவான சட்ட வரையறை தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகள் சங்கமிக்கும் ஓசூர் மாநகரை ‘திருவேணி சங்கமம்’ என வர்ணித்தார். காவேரியை மீட்டெடுக்கத் தொடங்கப்பட்ட ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் இன்று ஒரு பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதைப் பாராட்டிய அவர், மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் மண்ணின் வளம் மற்றும் விவசாயிகளின் வருமானம் உயர்வதை நேரடியாகக் கண்டு வியந்ததாகவும், இதனை இந்திய அரசின் முக்கியத் தேசியக் கொள்கையாக முன்னெடுக்கத் தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இந்த மாபெரும் கருத்தரங்கில் மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மேயர் சத்யா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயிகளுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். காவேரி கூக்குரல் இயக்கத்தின் தீவிர முயற்சியால் இதுவரை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 12.8 கோடி மரங்கள் நடப்பட்டு, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கருத்தரங்கின் தொழில்நுட்ப அமர்வுகளில் இந்திய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னணி வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். சந்தன சாகுபடியின் நுணுக்கங்கள், மிளகு சாகுபடியில் ஏக்கருக்கு ரூ. 30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் முறைகள், அவகேடோ, ஜாதிக்காய் மற்றும் மாம்பழச் சாகுபடியில் உள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், சென்னை ஐஐடி பேராசிரியர் சிவசுப்பிரமணியன் வழங்கிய மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பூச்சியியல் வல்லுநர் செல்வத்தின் ரசாயனமில்லா பூச்சி மேலாண்மை முறைகள் விவசாயிகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தன.

நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரம்மாண்ட விவசாயக் கண்காட்சியில், 150-க்கும் மேற்பட்ட அரங்குகளில் நவீன வேளாண் கருவிகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் மியாசகி மா, சந்தனம் உள்ளிட்ட 54 வகையான உயர் ரகப் பழமரக் கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. முன்னோடி விவசாயிகள் தங்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொண்டதோடு, மரங்களை அறுவடை செய்யாமல் வருமானம் ஈட்டும் முறைகள் குறித்தும் செயல்முறை விளக்கங்களை அளித்தனர். மண்ணின் நலனைத் தாய் உணர்வோடு அணுகினால் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 55 சதவீத மக்கள் செழிக்க முடியும் என்ற சத்குருவின் அறைகூவல், இக்கருத்தரங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளிடையே பெரும் மாற்றத்திற்கான விதையைத் தூவியுள்ளது. விவசாயிகளுக்கான சட்டச் சிக்கல்களைக் களைந்து, மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரம் புதிய உச்சத்தை எட்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த மாபெரும் கருத்தரங்கு நிறைவடைந்தது.

Exit mobile version