சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டாரத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை மாற்றம் காரணமாக, இப்பகுதியின் புகழ்பெற்ற பச்சை கத்தரி சாகுபடி கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் ஏக்கருக்கு பல்லாயிரக்கணக்கில் செலவு செய்துள்ள விவசாயிகள், விளைச்சல் கைக்கு வரும் நேரத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 4,500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டாலும், பெத்தாச்சி குடியிருப்பு, பெரியகோட்டை, மித்திரங்குடி, சிறுகப்பட்டி, வீரசேகரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பச்சை கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்கு காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி சந்தைகளில் தனி மவுசு உண்டு. குறிப்பாக, இப்பகுதி கத்தரிக்காய் அதன் சுவை மற்றும் தரத்திற்காகப் இல்லத்தரசிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.
தற்போது இப்பகுதியில் நிலவி வரும் தொடர் மழை மற்றும் அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக, கத்தரி செடிகளில் ‘தண்டு மற்றும் காய் புழு’ (Shoot and Fruit Borer) தாக்குதல் அதிகரித்துள்ளது. விளாரிக்காடு அருகே குளத்துவேலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கத்தரி செடிகளில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் கருகி விழுகின்றன. பறிக்கப்படும் காய்களில் பாதிக்கும் மேற்பட்டவை புழுக்கள் துளையிட்டு அழுகிய நிலையில் காணப்படுகின்றன.
இது குறித்து கவலையுடன் பேசியுள்ள விவசாயிகள், “ஏக்கருக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து கத்தரி பயிரிட்டுள்ளோம். தற்போது அறுவடை தொடங்கிவிட்ட நிலையில், பறிக்கும் காய்களில் பாதிக்கு மேல் பூச்சி அரித்து வீணாகிப் போகிறது. தரமான மருந்துகளை வாங்கித் தெளித்தும் எந்தப் பயனும் இல்லை. விற்க முடியாத காய்களைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் போடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்டு, தகுந்த நோய் தடுப்பு ஆலோசனைகளையும், நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
தோட்டப் பயிர்களை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள், இந்த எதிர்பாராத நோய் தாக்குதலால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. வரும் நாட்களில் வானிலை சீரானால் மட்டுமே மீதமுள்ள பயிர்களையாவது காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
