தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வழிபாட்டில் கரும்புக்கு இணையான முக்கியத்துவம் மஞ்சள் குலை மற்றும் பல்வேறு கிழங்கு வகைகளுக்கும் உண்டு. பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் பொங்கல் விளைபொருட்களின் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நெல்லை மாநகரின் டவுன், பாறையடி, சாலியர் தெரு போன்ற பகுதிகளில் விளைந்துள்ள மஞ்சள் குலைகளை அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏறத்தாழ 6 மாத காலப் பயிரான மஞ்சளை, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து விவசாயிகள் பராமரித்துள்ளனர். கூலியாட்கள் தட்டுப்பாடு போன்ற சவால்களையும் தாண்டி, இந்த ஆண்டு மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஒரு மஞ்சள் குலை தற்போது சில்லறை விற்பனையில் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மஞ்சள் மட்டுமன்றி, அனவன் குடியிருப்பு உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பன்னீர் கரும்பு அறுவடையும் சூடுபிடித்துள்ளது. இதேபோல், அம்பாசமுத்திரம் மற்றும் இடைகால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் படையலில் இடம்பெறும் சிறு கிழங்கு, சேனைக்கிழங்கு, பிடி கிழங்கு போன்ற கிழங்கு வகைகளைத் தோண்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர். மண்ணின் மணம் மாறாத இந்த விளைபொருட்களை வாங்குவதற்காகத் திருச்சி, மதுரை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் நெல்லைக்கு வருகை தருகின்றனர்.
இது குறித்து நகரப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “பாரம்பரியமாக இந்தப் பகுதிகளில் மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகளைப் பயிரிட்டு வருகிறோம். இந்த ஆண்டுப் போதிய விளைச்சல் கிடைத்துள்ளது. வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றாலும், பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நெல்லை டவுன் சாலையோரங்களில் நேரடியாகக் கடை விரித்து மக்களிடம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதனால் பொதுமக்களுக்குக் குறைந்த விலையிலும், எங்களுக்கு ஓரளவுக்கு லாபகரமான விலையும் கிடைக்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தனர். நெல்லைச் சந்தைகளில் மஞ்சள் குலையும் கரும்பும் குவிந்து வருவதால், மாநகரம் முழுவதுமே பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்ட மனநிலை இப்போதே களைகட்டியுள்ளது.
