கோவை: திமுகவிலேயே அல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் நிலவி வருகிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுக வலிமை பெற வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறேன். ஆனால், இன்று கட்சியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, குடும்ப அரசியல் அதிமுகவிலும் ஊடுருவியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மகன், மாப்பிள்ளை, மைத்துனர் ஆகியோரின் தலையீடுகள் கட்சியினுள் தெளிவாகக் காணப்படுகின்றன. இது நாடறிந்த உண்மை,” என்று கூறினார்.
அவர் மேலும், “தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி மற்றவர்களை ஏமாற்றக் கூடாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கட்சி மீண்டும் வலிமை பெற வேண்டும் என்பதே என் நோக்கம்,” என தெரிவித்தார்.
திமுகவிற்கு எதிராக குடும்ப அரசியல் என்பது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதான ஆயுதமாக இருந்து வரும் நிலையில், அதே குற்றச்சாட்டை அதிமுக மூத்த தலைவரே முன்வைத்திருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன், கடந்த வாரம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், நீக்கப்பட்டவர்களுடன் கட்சியினருக்கு எந்தவித தொடர்பும் கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, செங்கோட்டையன், “நான் கட்சியின் மூத்த நிர்வாகி. என்னை நீக்குவதற்கு முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார். இதற்காக அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜா நிகழ்ச்சிக்கு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றதும், பின்னர் டி.டி.வி. தினகரன், சசிகலாவை சந்தித்து பேசியதும் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















