அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைத் தடுக்கும் நோக்கில், சக அதிகாரிகளே திட்டமிட்டுப் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவது அருவருப்பானது என்றும், இது போன்ற செயல்பாடுகள் நிர்வாகச் சீரழிவையே காட்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச வழக்கில் முறையற்ற வகையில் சிக்க வைக்க முயன்ற வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் சரவணபாபுவின் அலுவலகத்தில், அவருக்குத் தெரியாமலேயே 2.50 லட்சம் ரூபாய் பணத்தை முன்கூட்டியே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரைக் கொண்டு அவரைச் சிக்க வைக்க ஒரு கும்பல் முயன்றது. இருப்பினும், அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் பணத்தை மறைத்து வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது அம்பலமானது. இந்தச் சதித் திட்டம் குறித்து சரவணபாபு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், ஏற்கனவே தீயணைப்பு வீரர்கள் ஆனந்த், முருகேஷ், மூர்த்தி மற்றும் அவர்களுக்கு உதவிய விஜய், முத்து சுடலை ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகத் தேடப்பட்டு வரும் திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து கொண்டு முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார். நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட அதிகாரி சரவணபாபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், “ஒரு உயர் அதிகாரியைச் சிக்க வைக்கப் பெரிய நெட்வொர்க்கை வீரராஜ் உருவாக்கியுள்ளார். இவரைக் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே இந்தப் பின்னணியில் இருக்கும் மற்ற நபர்கள் மற்றும் முழுமையான சதித் திட்டம் குறித்துத் தெரியவரும்” என வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, சக அதிகாரியின் வளர்ச்சியைத் தடுக்க இவ்வளவு தரம் தாழ்ந்த முறையில் குற்றங்களைச் ஜோடிப்பது அரசுத் துறைக்கே அவமானம் என்று சாடினார். சதித் திட்டத்தின் மையப்புள்ளியாக வீரராஜ் கருதப்படுவதால், போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், வரும் ஜனவரி 2-ஆம் தேதி மீண்டும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவுறுத்தினார். இச்சம்பவம் தமிழக அரசுத் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















