விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததோடு, எட்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
செவல்பட்டி கிராமம் அருகே உள்ள திவ்யா பட்டாசு ஆலையில் மதியம் வெடி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் உயிரிழந்தவர் கெளரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
தீவிரமாக காயமடைந்த எட்டு தொழிலாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை ஆபத்தாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்ததும், வெம்பக்கோட்டை ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். வெடிப்பின் தாக்கத்தில் ஆலையின் பகுதி சேதமடைந்து, சுற்றுப்பகுதியில் புகை மற்றும் அதிர்ச்சி பரவியது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு உற்பத்தி வேகமெடுக்கும் சூழலில், பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக மீண்டும் கவலை எழுந்துள்ளது.
போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வெடி விபத்தின் காரணங்களை விசாரித்து வருகின்றனர். மேலும் ஆலையின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
உயிரிழந்த கெளரி குடும்பத்தினருக்கு உடனடி நிதியுதவி வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வு சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.