மொபைல் யுகத்திலும் கொல்லாங்கரை கிராம மக்கள் நேரில் நடத்தும் ஆன்மிக நாடகங்கள்

நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் சினிமா மோகத்திற்கு மத்தியிலும், தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராம மக்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களது பாரம்பரிய ஆன்மிக நாடகக் கலையை உயிர்ப்புடன் வைத்துப் போற்றி வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, உள்ளூர் மக்களே வேடமிட்டு நடித்த சரித்திர நாடகங்கள் காண்போரைக் கட்டிப்போட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் கொல்லாங்கரை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை மிக விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். ஏகாதசி அன்று இரவு முழுவதும் கண் விழித்து (ஜாகரணம்), அதிகாலையில் பெருமாள் கோயில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வது பக்தர்களின் மரபு. அந்த இரவு நேரக் காத்திருப்பைப் பயனுள்ளதாகவும், ஆன்மிகச் சிந்தனையுடனும் கழிக்க வேண்டும் என்பதற்காகவே, பல தலைமுறைகளுக்கு முன்பு இந்த நாடகப் பாரம்பரியம் தொடங்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வள்ளி திருமணம், ராமாயணம், சத்தியவான் சாவித்திரி போன்ற இதிகாச மற்றும் புராண நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இந்த நாடகங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதில் நடிக்கும் அனைத்துக் கலைஞர்களும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வேடமிடுகின்றனர். காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாக, பெண்கள் இந்த நாடகங்களில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான ஆண்களேத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பெண் வேடமிட்டு மெருகேற்றப்படுகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் மொபைல் போன் மற்றும் ஓடிடி தளங்களில் மூழ்கியுள்ள நிலையிலும், கொல்லாங்கரை கிராம இளைஞர்கள் தங்களது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த இந்த நாடகக் கலையை அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். இதற்காகப் பல மாதங்களுக்கு முன்பே வசனங்களை மனப்பாடம் செய்து, மாலை நேரங்களில் ஒத்திகை பார்க்கின்றனர். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி, ஊரின் மையப்பகுதியில் மேடை அமைத்து, இரவு முழுவதும் இந்த நாடகங்களைக் கண்டு களிப்பது ஒரு சமூக நல்லிணக்க விழாவாகவும் மாறிவிட்டது.

இந்த நாடகங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், வருங்காலத் தலைமுறைக்கு நமது நாட்டின் இதிகாசங்களையும், தர்ம நெறிகளையும் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாகத் திகழ்கின்றன. மண்ணின் மணமும், பக்தியும் கலந்த இந்த நாடகப் பாரம்பரியத்தை அரசு மற்றும் கலைத்துறையினர் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.

Exit mobile version