மதுரை அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘தமிழ்க் கூடல் திருவிழா’ மற்றும் ‘அறிவியல் களம்’ தொடக்க விழாவில், விடாமுயற்சியின் மூலம் மாணவர்கள் எட்ட வேண்டிய இலக்குகள் குறித்து கேரள மாநில அரசுச் செயலர் ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் ஆற்றிய உரை மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்தது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்குப் பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் முன்னிலை வகிக்க, பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக் நபி வரவேற்புரை ஆற்றினார். விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘அறிவியல் களம்’ எனும் புதிய திட்டத்தைக் கேரள மாநில வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் அறநிலையத்துறை அரசுச் செயலர் ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் மாணவர்களிடையே உரையாற்றுகையில், “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கப்பாடல் வரிகளே நமது வாழ்வியலின் அடிப்படை. மாணவர்கள் கல்வியோடு நற்பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியும், சோர்வில்லாத தொடர் பயிற்சியும் இருந்தால், ஒரு சராசரி மாணவர் கூட மிகச்சிறந்த சாதனையாளராக உருவெடுக்க முடியும். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் இலக்கை நோக்கி ஓட வேண்டும்,” எனச் சிறப்புரையாற்றினார்.
அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அறிவியல் களம் அமைக்கப்பட்ட அதே வேளையில், தமிழ் மொழியின் சிறப்பைப் போற்றும் விதமாகத் தமிழ்க் கூடல் திருவிழாவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொண்டு தமிழின் தொன்மை குறித்தும், மாணவர்களின் படைப்பாற்றல் குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அழகர்சாமி, சண்முக ஞானசம்பந்தன், வழிகாட்டி மணிகண்டன், புலவர் சங்கரலிங்கனார், டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் கவிஞர் மூரா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழ் இயக்க நிர்வாகிகள் மாரியப்பன், பழனிச்சாமி, தமிழ் ஆர்வலர் ஆதித்தா உள்ளிட்டப் பலர் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர். அறிவியல் மற்றும் தமிழ் என இரண்டையும் இரு கண்களாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் திருவிழா, மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் களமாக அமைந்தது.
