தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம், ஏத்தக்கோயில் ஊராட்சியில் உள்ள ஏத்தக்கோயில் மற்றும் சித்தயகவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகள் இன்றி அன்றாட வாழ்வில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இந்த ஊராட்சி இணைக்கப்பட்டிருந்தாலும், குழாய் இணைப்பின் கடைக்கோடியில் இருப்பதால் குடிநீர் முழுமையாகக் கிடைப்பதில்லை. இதனால், பொதுமக்கள் வேறு வழியின்றி நிலத்தடி நீரையே அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தும் நிலை நீடிக்கிறது. மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுப் பல மாதங்களாகியும், இதுவரை ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை எனப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்துப் பேசிய முத்தையா மற்றும் ஜெயராம் உள்ளிட்ட அப்பகுதி மக்கள், “ஒண்டிவீரன் சுவாமி கோயில் செல்லும் சாலையில் உள்ள சிறுபாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது; இதன் வழியாக விவசாய வாகனங்கள் செல்வது பெரும் ஆபத்தாக உள்ளது. அதேபோல், பெண்கள் பயன்பாட்டிற்கான பொதுக் கழிப்பறை பராமரிப்பின்றிப் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், வேறு வழியின்றித் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. கண்மாயிலிருந்து வாசிமலை கரடு வரையிலான 2 கி.மீ தூரத்திற்குத் தார்ச் சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையும் கிடப்பில் உள்ளது. வாசிமலையான் கோயிலுக்கு வரும் வெளிமாவட்ட பக்தர்களும், விவசாயிகளும் சாலை வசதியின்றிப் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர்” எனப் பட்டியலிட்டனர்.
மேலும், கிராமத்தின் நடுவே செல்லும் வெள்ளப்பாறை ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இந்திரா நகர் பகுதியில் ஓடை அரிப்பால் சேதமடைந்த பாலத்தைச் சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் கிராமம் இருளில் மூழ்கிக் கிடப்பதோடு, ஜல் ஜீவன் திட்டத்திற்காகத் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, முடங்கிக் கிடக்கும் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தவும், சேதமடைந்த பாலங்கள் மற்றும் சாலைகளைச் சீரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏத்தக்கோயில் ஊராட்சி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
