ஈரோடு பொதுக்கூட்டம் : 43 நிபந்தனைகள் விதித்த காவல் துறை ; மீறமாட்டோம் என தவெக பிரமாணப் பத்திரம்

ஈரோடு :
ஈரோட்டில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்துக்காக காவல் துறை விதித்த 43 நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றுவதாக தவெக நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. இதற்காக, நிபந்தனைகளை மீறமாட்டோம் என பிரமாணப் பத்திரத்தை காவல் துறையிடம் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 95 நாட்கள் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில், தமிழக வெற்றி கழகமும் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வரும் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகேயுள்ள சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள சுமார் 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் மேடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 300-க்கும் மேற்பட்டோர் இதில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஏற்பாடுகளை தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார். பொதுக்கூட்டம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை கருத்தில் கொண்டு, காவல் துறை 43 நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்றும், தொண்டர்கள் சாலையில் நிற்க அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான தடுப்புகள் சர்வீஸ் சாலையிலிருந்து வலது புறமாக சுமார் 250 அடி இடைவெளி விட்டு அமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் பயணிக்கும் பிரச்சார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், வாகனத்தைச் சுற்றி குறைந்தபட்சம் 50 அடி இடைவெளி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்குள் நுழையும் போது தள்ளுமுள்ளு ஏற்படாமல், வரிசைப்படி அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அமைக்கப்படும் இரும்பு தடுப்பு பாக்ஸ்களில் 80 சதவீத கொள்ளளவிற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ அவசர நிலைகளுக்கான அருகிலுள்ள மருத்துவமனைகளின் விவரங்களை காவல் துறைக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்பதும் நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் அவசர வாகனங்கள் செல்ல தனி வழித்தடம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கூட்டம் முழுவதும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள், எல்இடி திரைகள் அமைக்கப்பட வேண்டும். டிரோன் கேமரா இயக்குநர் விவரங்கள் மற்றும் நிகழ்ச்சியின் முழு வீடியோ பதிவையும் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கூட்டத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில், முன்னதாகவே தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு, ஆயுதங்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கூட்டத்திற்கு கொண்டு வரவும், பட்டாசு வெடிக்கவும் அனுமதி இல்லை. மின்கம்பங்கள், மரங்கள், கட்டடங்கள் மற்றும் விளம்பர பதாகைகளின் மீது ஏறி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். வெயிலை கருத்தில் கொண்டு மேடை மற்றும் பார்வையாளர்கள் பகுதிகளில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்றும், நிபந்தனைகள் மீறப்பட்டால் ஏற்படும் அனைத்து அசம்பாவிதங்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version