சென்னை : “நீங்கள் நடத்துவது நல்ல ஆட்சி என்று முதலமைச்சர் ஸ்டாலினை யாரோ நம்ப வைத்துவிட்டார்கள்” என அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :
“ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் எண்ணம் முழுவதும் என் எழுச்சி பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தியுள்ளீர்கள். ஆனால் அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா மேற்கொண்ட திட்டங்களை காப்பி-பேஸ்ட் செய்து பயன்படுத்துகிறீர்கள்.
சொந்தமாக எந்த திட்டத்தையும் உருவாக்க வல்லமையில்லாமல், அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களுக்கு உங்கள் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?”
“இது போதாது என ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கிச் சென்று ஏமாற்றம் செய்ததுபோல், இப்போது ஒரு துண்டுசீட்டில் 46 சேவைகளை அச்சிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சி செய்கிறீர்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த சேவைகளை ஒருவேளை நிறைவேற்றவே இல்லை என்பது உண்மை.”















