ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் 4 கி.மீ நீளமுள்ள மலைப்பாதை, கடந்த சில மாதங்களாகப் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பக்தர்களின் வசதிக்காகச் சாலை விரிவாக்கம் மற்றும் தார்ச் சாலைப் பணிகள் செம்மையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு பாதுகாப்பு நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பாதையில் இரவில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு வளைவுகள் மற்றும் பாதையின் எல்லைகளைத் தெளிவாகக் காட்டும் விதமாக, சாலையோர மரங்களில் ‘ரிப்ளெக்டர்’ (ஒளிப் பிரதிபலிப்பான்) ஸ்டிக்கர்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த எச்சரிக்கை ஸ்டிக்கர்களைப் பதிப்பதற்காக, மலைப்பாதையோரம் வளர்ந்துள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட பழமையான மரங்களில் இரும்பு ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. பசுமையாகக் காட்சியளிக்கும் மரங்களின் தண்டுகளில் ஆணி அடித்துப் பதிக்கப்பட்டுள்ள இந்தச் செயல், மரங்களின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு அவற்றைப் படிப்படியாக அழிவுக்கு இட்டுச் செல்லும் என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதி வனத்துறையின் நேரடித் தணிக்கையில் உள்ள சூழலில், அவர்களுக்குத் தெரிந்துதான் இந்தச் செயல் நடந்ததா அல்லது ஒப்பந்ததாரர்கள் தன்னிச்சையாகச் செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாலை விபத்துகளைத் தடுக்க ரிப்ளெக்டர்கள் அவசியம் என்றாலும், அதற்கு உயிரோட்டமுள்ள மரங்களைச் சிதைப்பது சட்டப்படி குற்றம் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்துப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “மலைப்பாதை புதுப்பிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மரங்களில் ஆணி அடிப்பது இயற்கை விதிகளை மீறுவதாகும். எனவே, உடனடியாக மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாகச் சாலையோரத் தடுப்புச் சுவர்கள் அல்லது இரும்புத் தூண்களில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்களைப் பதிக்கும் மாற்று முறையை நிர்வாகம் கையாள வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளனர். பசுமைப் போர்வையாக விளங்கும் சென்னிமலைப் பகுதியைச் சேதப்படுத்தாமல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
