சென்னை :
மாணவர்களிடம் சாதிய உணர்வு மற்றும் பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் இடம்பிடிக்காமல், ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2,715 ஆசிரியர்களுக்கு நுழைவுநிலைப் பயிற்சியை முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது ரோபோ ஒன்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கைகொடுத்து வரவேற்றது.
“ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டுமே கற்பிப்பதற்கில்லை, சமூகப் பொறுப்பையும் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும். தொழில்நுட்ப உலகில் தேவையற்ற தகவல்கள் அதிகரித்து வரும் சூழலில், மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அளிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை,” என முதல்வர் கூறினார். மேலும், அறிவாற்றலுக்கு இணையாக மாணவர்களின் மனநலம் மற்றும் வாசிப்புப் பழக்கம் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ‘ரோல் மாடல்’ ஆக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற 142 மாணவர்களுக்கு முதல்வர் காசோலை வழங்கி பாராட்டினார்.
அதேவேளை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.94 கோடி செலவில் கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கொல்லிமலையில் உருவாக்கப்பட்ட உண்டு-உறைவிடப் பள்ளியை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், ரூ.277 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள 243 பள்ளி கட்டடங்கள் மற்றும் சாரண-சாரணியர் இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.















