ஆகாஷ் தீப்பின் செயலால் எரிச்சலடைந்த இங்கிலாந்து பயிற்சியாளர்

லண்டன் : ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்காக நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றுவருகிறது. இரு அணிகளும் தொடருக்குள் பல்வேறு சம்பவங்களால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வகையில், இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டை தோளில் கை வைத்து எச்சரித்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பின் செயல், இங்கிலாந்து அணியில் உள்ள பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய போட்டியில் ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சை விமர்சித்திருந்த டக்கெட், “உன்னால் விக்கெட் எடுக்க முடியாது” என சாடியதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில், ஐந்தாவது டெஸ்ட்டில் ரிவர்ஸ் ஷாட் விளையாட முயற்சித்த டக்கெட், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியானார். உடனே அவரை தோளில் கை வைத்து புறப்பட செய்ததாக ஆகாஷ் தீப்பின் செயல் விவாதத்துக்கு உள்ளானது.

இந்த செயலை குற்றம் கூறிய இங்கிலாந்து துணை பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக், செய்தியாளர் சந்திப்பில், “இப்படி ஒரு செயலை இதற்குமுன்பு காணவில்லை. வார்த்தை மோதல் எல்லாம் கிரிக்கெட்டில் நடப்பதே. ஆனால் இது அதற்கு மாறான செயல். இது என் காலத்தில் நடந்திருந்தால் வேறு மாதிரி நடந்திருக்கும். கவுண்டி கிரிக்கெட்டில் கையைத் தட்டியிருப்பார்கள் அல்லது வேறு முறையில் பதிலடி கொடுத்திருப்பார்கள்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், கை ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளரான இயன் வார்டு, கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிடம், “உங்களை இப்படித் தள்ளிச் செலுத்தி வெளியேற்றியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” எனக் கேட்டதற்கு, பாண்டிங் “பஞ்ச் செய்திருப்பேன்!” என பதிலளித்தார்.

இந்த சம்பவம், தொடருக்குள் ஓயாத மோதல்களின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. ஒருபுறம் இந்திய அணியின் உற்சாகமும், மறுபுறம் இங்கிலாந்து வீரர்களின் அதிருப்தியும் இந்த தொடரை மேலும் சூடுபிடிக்கவைக்கிறது.

Exit mobile version