அனில் அம்பானியின் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, டில்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைகள், அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களை “மோசடியாளர்” என அரசுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. கடந்த ஜூன் 13ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பட்டியலிட்டதற்குப் பிறகு தொடங்கப்பட்டன.

மோசடிக்கு காரணமாக கூறப்படும் விவரம் :

யெஸ் வங்கியின் முன்னாள் நிறுவனர் ராணா கபூர், பல்வேறு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக நிதி உதவி வழங்கியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதே பாணியில், அனில் அம்பானி ரூ.12,800 கோடி கடனை யெஸ் வங்கியிடமிருந்து பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பெருமளவு கடன்; வெளிப்படையாக இல்லாத நிதி பயன்பாடு :

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மொத்தமாக ரூ.31,580 கோடி கடன் பெற்றுள்ளன. இதில்:

ரூ.13,667 கோடி பழைய கடனை அடைப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது

ரூ.12,692 கோடி துணை நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

எல்லாம் சேர்த்து, பெறப்பட்ட மொத்தக் கடனான ரூ.41,863 கோடியில், ரூ.28,421 கோடியின் பயன்பாடு மட்டுமே தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிதி தவறான முறையில் செலவிடப்பட்டதாக சந்தேகமுள்ளதன் அடிப்படையில், எஸ்.பி.ஐ. தனி ஆய்வுக்குப் பிறகு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தையும் அனில் அம்பானியையும் மோசடியாளராக வகைப்படுத்தியுள்ளது.

Exit mobile version