வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள உலகப்புகழ் பெற்ற சிஎம்சி (CMC) மருத்துவமனையின் மருத்துவர்கள் தங்கியுள்ள குடியிருப்பில், அமலாக்கத்துறையினர் நேற்று நடத்திய அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள இந்த குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஒருவருடன் மேலும் நான்கு மருத்துவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்புப் படை (CISF) வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் சோதனையைத் தொடங்கினர்.
காலை தொடங்கிய இந்தச் சோதனையானது இரவு வரை சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாகத் நீடித்தது. மருத்துவமனைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ஏதேனும் நிதி முறைகேடுகள் நடைபெற்றதா அல்லது மருத்துவர்களின் தனிப்பட்ட நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் முறையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்தச் சோதனையின் போது வெளியாட்கள் எவரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை; குடியிருப்பில் வசிப்பவர்கள் கூட பலத்த சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிஎம்சி மருத்துவமனை வளாகத்திற்குள் அமலாக்கத்துறையின் எந்த விதமான சோதனையோ அல்லது விசாரணையோ நடைபெறவில்லை. மருத்துவமனை நிறுவனம் எப்போதும் போல இயல்பாகச் செயல்பட்டு வருகிறது. பணியாளர் ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட குடியிருப்பில் நடைபெறும் எந்தவொரு நடவடிக்கையும் சிஎம்சி நிர்வாகத்துடனோ அல்லது அதன் செயல்பாடுகளுடனோ தொடர்புடையது அல்ல. சிஎம்சியில் ஈடி சோதனை நடப்பதாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை” என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சோதனை நடைபெற்ற இடத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வும் அரங்கேறியது. சுமார் 11 மணி நேரச் சோதனையின் நடுவே, காலை 10:30 மணியளவில் குடியிருப்பில் இருந்தவர்கள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்திருந்தனர். உணவை விநியோகிக்க வந்த நபரை தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், அவர் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களை முழுமையாகச் சோதனையிட்ட பின்னரே உள்ளே கொண்டு செல்ல அனுமதித்தனர். அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை வேலூர் மாநகரில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சோதனையின் முடிவில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
